சனி, 29 டிசம்பர், 2012

ஒரு பொய்.. தமிழ் சிறுகதை

இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே பயணிகளின் கனிவான கவனத்திற்கு, சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 540 தற்போது புறப்பட தயாராக உள்ளது. இவ்விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் வாயில் எண் 7 வழியாக விமானம் நோக்கி செல்லவும். 

"ப்ரியா செல்லம், நம்ம flight வந்தாச்சு... வா போகலாம்".... தனது 8 வயது மகளை அழைத்தான் கார்த்திக்.
"அப்பா, வாயில்ன்னா என்னப்பா?"... அப்பாவியாய் கேட்ட மகளிடம்... "வாசல் டா கண்ணா"... என்று கூறி புறப்பட்டான்.

விமான பணிப்பெண்ணுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தனது முன்னால் செல்பவர் வழிவிடும் வரை நின்று பின் தனது இருக்காய் நோக்கி சென்றான். 12 A, B இருக்கையில் அமர்ந்ததும், "ப்ரியா, belt மாட்டிக்கோடா" என்று அவளுக்கு பெல்டை மாட்டிவிட்டான்.

"எப்பபாத்தாலும் ஜன்னல் சீட்ல நீயே உக்கார்ரப்பா.. திரும்ப வரும்போது நான் உக்காருவேன்"... சண்டையிட்ட ப்ரியாவிடம் "சரி டா".. என்று சொல்லி தனது புத்தகத்தை திறந்து படிக்கலானான். 

"கார்த்திக்!"... ப்ரியாவின் குரல் கேட்டு நிமிர்தவனுக்கு அதிர்ச்சி.... நினைத்துக்கூட பார்க்கவில்லை மீண்டும் ப்ரியாவை சந்திப்பான் என்று.... 4 ஆண்டுகள் பின் இன்று விமானத்தில் அவன் இருக்கைக்கு அருகில். 

"அப்பா உனக்கு இந்த ஆண்டியை தெரியுமா?"... ப்ரியா கேட்டாள்.... தெரியும் என தலையசைத்துவிட்டு.... அவளை நோக்கி.... "எப்படி இருக்கீங்க ப்ரியா?" என்று மட்டும் கேட்டுவிட்டு, தனது மகளை நோக்கி... "இவங்க பேர்தான் ப்ரியா.. அப்பா உனக்கு கதை சொல்லுவேன் இல்லயா... அந்த ஆண்ட்டி இவங்கதான்".... என்று அவள் காதில் மெல்லியதாய் கூறினான்.

அவள் இருக்கையில் அமர்ந்த பின்னும் நெகிழ்ச்சியில் இருவராலும் எதவும் பேசிக்கொள்ள இயலாததை உணரந்தவளாய் அந்த சிறுமி, ப்ரியாவை நோக்கி... "ஆண்ட்டி, என் பேர் கூட ப்ரியா தான், அப்புறம் எங்க அப்பா என்கிட்ட பொய் செல்லவே மாட்டார்"... அவ்வளவு ஸ்மார்டா பேசுகின்ற தன் பெண்ணை பார்த்து ஆச்சர்யத்தில் திளைத்தும் வெளிகொணராமல் புன்னகை உதிர்த்து தனது மகளின் தலை கோதினான்.

சில நிமிட மௌனத்தின் பின், அவளே மௌனத்தை உடைத்தாள்.

"நான் என்ன அவ்ளோ நல்லவளா கார்த்திக்?"... நெகிழ்ச்சியில் அவள் கேட்க்க, இவன் பதில் கூறும் முன், அவனது மகள் முந்திக்கொண்டு "ஆண்ட்டி இந்த dialog விண்ணைத்தாண்டி வருவாயா படத்துலையே கேட்டாங்க.. நீங்க ஒரு changeக்கு, நீங்க என்ன அவ்ளோ நல்லவரா கார்திக்ன்னு கேட்டிருக்கலாமே?"... என்று கூறி சிரித்தாள்.

"நீ ரொம்ப ஸ்மார்ட்டா பேசரடி".. என்று சிறுமியின் தலை தழுவி.... "உங்கம்மா வரலையா?" என்று கேட்டாள்... சிறுமி நிமிர்ந்து கார்த்திக்கை பார்க்க..."அவங்க already போய்ட்டாங்க.. திரும்பி வரும்போது ஒண்ணா வருவோம்".. என்றான்.

"நான் அவங்களை பார்க்கணுமே கார்த்திக்?".... கேட்டவளிடம் "கண்டிப்பா, ஒரு நாள் வீட்டுக்கு வாங்க"... என்று கூறினான்.

"அப்பா நான் bathroom போயிட்டு வர்றேன்"...என்று சொல்லி ப்ரியா அங்கிருந்து அகன்றாள்

"எப்போ adopt பண்ணீங்க கார்த்திக்?"....
"Processing 2 வருஷம் ஆச்சு, இப்போ எங்களோட வந்து 1.5 வருஷம் ஆச்சு"...

மீண்டும் மௌனம் நிலவ.... "நீங்க சந்தோஷமா இருக்கறத பார்க்க சந்தோஷமா இருக்கு"... மனதுக்குள் கூரியவளாய்... நீங்க ப்ரியாகிட்ட ஏன் பொய் சொல்றதில்லன்னு கேட்டாள்... 

அதெப்படி பெண்கள் மட்டும் தங்கள் எல்லா கேள்விக்கும் விடை தேடுகிறார்கள்?... அதுமட்டுமல்லாது எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்டு விடுகிறார்கள்... என்று நினைத்துக்கொண்டே சிறிதாய் ஒரு புன்னகை மட்டும் உதிர்த்து மௌனத்தை பதிலாய் தந்தான்.... சில விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட சொல்லாமல் புரியவைக்க கற்றுகொடுத்த குருவே அவள்தான்!.... புரிந்து கொண்டவளாய் மேலும் தொடராமல் "ப்ரியான்னு பேர் வச்சிட்டாலே ஸ்மார்ட் ஆயிடறாங்கல்ல"... என்று கூறி புன்னகைத்தாள்....

டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும், "கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வர்றேன் கார்த்திக்" "take care டா குட்டி "... என்று சின்ன பெண்ணிடம் கூறிவிட்டு விடைபெற்றாள்.

அவள் சென்றதும் கார்த்திக்கிடம் சிறுமி "அப்பா இதுவரைக்கும் நீங்க ப்ரியாகிட்ட சொன்ன உண்மைகளை விட இன்னிக்கு நீங்க அம்மா இருக்காங்கன்னு சொன்ன பொய் ரொம்ப ரொம்ப உயர்ந்ததுப்பா".... என்று சொல்ல.... அவளை அணைத்து முத்தமிட்டான்.

"அவங்க வீட்டுக்கு வந்தா என்னப்பா பண்றது?".. என்று அறியாமல் கேட்ட சிறுமியிடம்... "அவங்க வரமாட்டாங்க டா".... என்று சொல்லி நடக்கலானான்.

பல கதைகளின் இனிமையை உணர்வதற்கு அதன் கசப்பான முடிவுகளே காரணம்...

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்


படித்தவை:

  1. புதுமைப்பித்தன் – மனித இயந்திரம்:கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. Brilliant! புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  2. கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  3. தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு: ரயிலில் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் ஏழை சிறுமிக்கு பற்றாக்குறை குடும்பத்தின் சின்னப் பையன் பழம் வாங்கிக் கொடுக்கிறான். மிக நன்றாக எழுதப்பட்ட கதை.
  4. கு. அழகிரிசாமி – அன்பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.
  5. சுந்தர ராமசாமி – பிரசாதம்: புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைவிகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் கதைகளும் நினைவு வருகின்றன.
  6. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  7. அசோகமித்திரன் – புலிக்கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றன. அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு.பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  8. தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.
  9. பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.
  10. கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  11. திலீப்குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப்குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது.இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவுஎன்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.
    கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  12. வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  13. ஜெயமோகன் – பல்லக்கு: வாழ்ந்து கெட்ட குடும்பம் இப்போது ஒரு முன்னாள் “வேலைக்காரன்” மூலம் இருப்பவற்றை விற்று காலத்தை ஓட்டுகிறது. அந்த வேலைக்காரனின் சுயரூபம் தெரியும்போது… பிரமாதமான கதை.
  14. வண்ணதாசன் – நிலை: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  15. ஆ. மாதவன் – நாயனம்: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  16. பாமா – அண்ணாச்சிநல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  17. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள் – நல்ல denouement, ஆனால் என் கண்ணில் நாஞ்சில் இதை விட பிரமாதமான கதைகளை எழுதி இருக்கிறார்.
  18. சுஜாதா – மகாபலி – என் கண்ணில் சுமாரான கதைதான்.

படிக்காதவை:

  1. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  2. இரா. முருகன் – உத்தராயணம்
  3. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. ரா.கி. ரங்கராஜன் – செய்தி
  6. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  7. ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
  8. சிவசங்கரி – செப்டிக்
  9. சோ. தருமன் – நசுக்கம்
  10. சுந்தர பாண்டியன் – கனவு
  11. சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!
தொகுக்கப்பட்ட பக்கம்: லிஸ்ட்கள், தமிழ் சிறுகதைகள், சுஜாதா

மனம் தளராதே | எறும்பு கதை


மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

வாழ்க்கைப் பயணம் - உழைப்பு


அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.
 
உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது


எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

மரங்கொத்திப் பறவை


சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.


அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.  அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்?

மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒருவன்  கால்நடைப் பயணமாகப் ஒரு காட்டின் வழியே சென்றான்.

நீண்ட தூரம் நடந்ததால் அங்கிருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.


மிகவும் பசியாக இருக்கிறதே எதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான்.

உணவு சாப்பிட்டதும் உறக்கம் வந்தது. ஒரு தலையணை  இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான், நினைத்தவுடன் தலையணையும் வந்தது.
அதில் ஏறிப் படுத்தான். நடந்து வந்ததால் கால்கள் வலிக்கின்றதே, இரண்டு பேர் கால்களை அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே என்று எண்ணினான்.
உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல் மேலும் கீழுமாய்ப் பார்த்தான். எதுவும் புரியவில்லை அவனுக்கு!

உடனே அவனுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது.

ஆஹா நாம் ஒரு காட்டில் அல்லவா ஓய்வு எடுத்துகொண்டிருக்கிறோம்! புலி ஏதேனும் வந்து நம்மை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? என நினைத்தான் அதன்படியே புலியும் ஒன்று வந்து அவனை விழுங்கிற்று.

தூய்மையான உள்ளமாக இருந்தால் அங்கு கடவுள் வசிப்பார். அவநம்பிக்கையுடன் இருந்தால்.......?

அன்னையின் வளர்ப்பு | ஒரு விஞ்ஞானியின் கதை


தமிழ் அறிவு கதைகள் 100 வது பதிவு | தங்களின் ஆதரவுக்கு  நன்றி

நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி  இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார் ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெய்யிலில் காட்டினார்.
பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார், ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேளையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார்.

இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர் சி வி இராமன் ஆனார்.